Popular Posts

Thursday, January 6, 2011

இன்று நான் படித்தவை 06/01/2011

தெனாலிராமன் கதைகள்
குறைந்த விலைக்கு குதிரையை விற்றல்:
ஒரு சமயம் தெனாலிராமனுக்கு உடல் நலம் மோசமாகி விட்டது. வைத்தியரும் வந்து பார்த்தார். வைத்திய செலவு நிறைய ஆகும் என்று சொல்லி விட்டுப் போய் விட்டார். வைத்திய செலவுக்கு தெனாலிராமனிடம் பணம் இல்லை. ஆகையால் அவ்வூரில் வட்டிக்கொடுக்கும் சேட்டை அணுகினான். அதற்கு சேட்டும் "பணத்தை எப்போது திருப்பிக்கொடுப்பாய்" என்று கேட்டார். தெனாலிராமனும் உயர் ஜாதி அரேபியக் குதிரை வைத்திருந்தான். நல்ல விலை போகும் அதனால் உடல் நலம் தேறியதும் குதிரையை விற்றுப் பணம் தருவதாகச் சொன்னான். அவன் சொன்னதின் பேரில் சேட்டும் நம்பிக்கையோடு பணம் கொடுத்தான்.

பணத்தைப் பெற்றுக் கொண்ட தெனாலிராமன் வைத்தியரிடம் சென்று சிகிச்சையை ஆரம்பித்தான். விரைவில் குணமும் அடைந்தான்.
பல மாதங்கள் ஆயின. தெனாலிராமனிடமிருந்து பணம் வருவதாகத் தெரியவில்லை. ஆகையால் சேட் தெனாலிராமனை சந்திக்கப் புறப்பட்டான்.
தெனாலிராமனைப் பார்த்து "என்னப்பா, உடல் குணமானதும் குதிரையை விற்றுப்பணம் தருவதாக சொன்னாயே. இன்னும் தரவில்லையே உடனே கொடு என்றான். தெனாலிராமனும் நன்கு யோசித்தான். அநியாய வட்டி வாங்கு சேட்டுக்குப் பாடம் கற்பிக்க விரும்பினான்.

"சரி குதிரையை விற்றுப் பணம் தருகிறேன். என்னுடன் நீயும் வா" என்று அவனையும் அழைத்துக் கொண்டு பக்கத்து ஊரில் நடக்கும் சந்தைக்குப் புறப்பட்டனர். போகும் போது குதிரையையும் கூடவே ஒரு பூனையையும் அழைத்துச் சென்றான். சந்தையில் தெனாலிராமனின் பளபளப்பான குதிரையைப் பார்க்க பெரிய கூட்டமே கூடி விட்டது. அப்போது ஒரு பணக்காரன் தெனாலிராமனைப் பார்த்து "உன் குதிரை என்ன விலை" என்று கேட்டான். அதற்கு தெனாலிராமனோ "குதிரையின் விலை 1 பவுன்தான். இந்த பூனையின் விலையோ 500 பவுன். ஆனால் இந்த பூனையையும் சேர்த்து வாங்கினால்தான் இக்குதிரையைக் கொடுப்போன்" என்றான்.

தெனாலிராமனின் பேச்சு அவனுக்கு விநோதமாக இருந்தாலும் குதிரையை வாங்க வேண்டும் என்ற மிகுந்த ஆவலில் 501 பவுன் கொடுத்து குதிரையையும் பூனையையும் வாங்கிச் சென்றான். பின் சேட்டிடம் ஒரு பவுனை மட்டும் கொடுத்தான். ஆனால் ஒரு பவுனை சேட் வாங்க மறுத்து விட்டான். "குதிரை அதிக விலைக்குப் போகுமென்று நினைத்து தானே உனக்குப் பணம் கொடுத்தேன். நீ இப்படி ஏமாற்றுகிறாயே" என்றான்.

அதற்கு தெனாலிராமன் "ஐயா சேட்டே குதிரையை விற்றுத்தான் உமக்குப்பணம் தருகிறேன் என்று சொனனேன். அதன்படியே குதிரையை 1 பவுனுக்கு விற்று அந்த 1 பவுனையும் உனக்கே கொடுத்து விட்«ட்ன். நீ வாங்க மாட்டேன் என்கிறாயே............ இது என்ன நியாயம்" என்றான்.
சேட்டோ 500 பவுன் வேண்டுமென்றான். இறுதியில் இவர்கள் வழக்கு மன்னர் கிருஷ்ண தேவராயரிடம் சென்றது. மன்னர் இவ்வாழ்க்கை ஆதியோடு அந்தமாக விசாரித்தார். பின் தெனாலிராமன் செய்தது சரியே என்று தீர்ப்புக் கூறினார்.


வாரியாரின் பொன்மொழிகள்!
பசியானது அறிவைப் போக்கும், தரும சிந்தனையைக் கெடுக்கும். பசி வந்தால் ஞானமுள்ளவனும் தைரியத்தை இழந்து விடுவான். எவன் பசியை வெல்லுவானோ நிச்சயமாக அவன் சொர்கத்தை வெல்லுவான்.

கோபத்தையும் புலனையும் வென்றவர்கள் சொர்கத்தின் வாயிலைப் பார்கின்றனர்.

ஆயிரம் கொடுக்கச் சக்தி இருக்க நூறு கொடுப்பவனும், நூறு கொடுக்கச் சக்தியுள்ளவன் பத்துக் கொடுப்பவனும், சக்திக்குத் தக்கபடி தண்ணீரைக் கொடுப்பவனும் ஆகிய எல்லாரும் சமமான பலனை அடைகின்றனர்.

வீட்டின் வாயிலில் நல்லவனை நிறுத்தி தகாதவர்களை விடாதே என்று காவல் காக்கச் சொல்வது போல நெஞ்சில் நல்லுணர்வு என்ற காவலை வைக்க வேண்டும். அதனால் தீய எண்ணங்களை எண்ணுவதற்கு இடமிராது. நல்லெண்ணங்களே தோன்றும்.

வீட்டு வாசலைப் பூட்டி விட்டு உள்ளே வாருங்கள் என்றழைத்தால் யார் வரமுடியும். அதேபோல உன் இதயத்தை மும்மலமாகிய கதவினால் பூட்டி விட்டு இறைவனை அழைத்தால் எப்படி வருவான். உள்ளத்தை தூய்மையாக திறந்து வைத்தால் இறைவன் உன்னிடத்தில் பிரகாசிப்பார்.

எல்லா உயிர்களும் இறைவனின் கோவில்களே. உயிர்கள் தோறும் இறைவன் இருக்கிறான். ஆதலால் எல்லா உயிர்களிடத்திலும் அன்பாயிரு. உயிர்களிடத்தில் செலுத்தும் அன்பு இறைவனைச் சேரும்.

- சுவாமி கிருபானந்த வாரியார்

No comments: